செல்வாநகர் கிராமத்தைப் பற்றி பத்தாண்டுகளுக்கு மேலாக அறிந்திருக்கிறேன். வறுமையும் காயங்களும் மிக்க அந்த கிராமத்தின் ஊடாக ஒரு முறை யுத்தம் நடைபெறும் பொழுது ஓடிக்கொண்டிருந்த ஞாபகமும் எனக்கு வருகிறது.
இப்பொழுது யுத்த காலத்தின் தாக்குதல்களுக்கு உள்ளான அந்த கிராமமும் மக்களும் துயர் தரும் வாழ்விலிருந்து மீள முடியாத நிலையில் இருக்கின்றனர். இப்படிக் குறிப்பிடும் கட்டுரையாளர் நவராஜ் பார்த்தீபன் போரில் ஊனமடைந்தவர்கள் உட்பட அந்த கிராமத்து மக்கள் சிலரையும் அண்மையில் சந்தித்த பிறகு இந்த விபரணக் கட்டுரையை எழுதியிருக்கிறார்.
ஊனமடைந்தவர்களின் குடியிருப்பு என்று அந்தக் குடியிருப்பை சுட்டும் பொழுது மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் அப்படித்தான் அந்த மக்களை எல்லோருமே அழைக்கிறார்கள்.
போராலும் இயற்கையாலும் பாதிக்கப்பட்ட அந்த மக்கள் ஒரு குடியிருப்பாக ஒரிடத்தில் இணைந்து வாழ்கிறார்கள். அவர்களை போர் மீண்டும் மீண்டும் தாக்கியிருக்கிறது. யுத்தம் தீவிரமாக நடைபெற்றன என்பதை சொல்லும் மண்மேடுகள் இன்னும் சனங்களின் காணிகளை ஊடறுத்துச் செல்கின்றன.
செல்வாநகர் கிராமத்தைப் பற்றி சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக அறிந்திருக்கிறேன். குறிப்பாக சிறிய வயதில் அந்த கிராமங்களின் ஊடாக குறுக்கு வழியாக பாவிக்கும் வீதிகளால் பயணங்களை பல தடவை மேற்கொண்டிருக்கிறேன்.
பற்றைகளும் கிடுகு கொட்டில்களும் என்றுதான் கண்ணுக்கு தெரிந்திருக்கின்றன. ஒருமுறை யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அந்த கிராமத்தின் ஊடாக ஒரு குறுக்கு வழியாக எதிரிகளின் கண்களில் பிடிபடாதபடி ஓடிய ஞாபகமும் அந்தத் தெருக்களை பார்க்க எனக்கு மீள வந்து கொண்டிருந்தது.
எதிரி பதுங்கியிருக்கும் முடக்குகளோ! என்ற அச்சம் மனதில் குவிந்தன. இப்பொழுது இடுகாடுகளைப்போல யாருமற்ற காணிகளும் யுத்த காலத்தின் மண்மேடுகளும் பதுங்குகுழிகளும் மிதிவெடி அபாயங்களும்தான் பரவிக் கிடக்கின்றன.
யுத்தக் குற்றம் சுமத்தப்பட்டதன் காரணமாக பெற்றோர்களுடன் தடுப்பில் இருந்த குழந்தைகளும் அந்தக் கிராமத்தில் வசிக்கிறார்கள். அந்த கிராமத்தில் முதல் முதலில் நான் வனசுதன் அன்னலட்சுமி என்பவரை சந்தித்தேன். மட்டக்களப்பை சேர்ந்த அன்னலட்சுமி முன்னாள் போராளியாக இருந்தவர்.
ஆனால் படுகாயமடைந்து ஊனமுற்றதால் போராட்டத்தில் இருந்து 90களில் விலகி குடும்ப வாழ்க்கையை அமைத்த அவரும் அவரது கணவரும் அவரது நான்கு வயதான வேழினியும் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். தடுப்பில் இருந்த பொழுது வனசுதன் இறந்து போயிருக்கிறார்.
கண்களில் எறிகணைத்துண்டு கிடப்பதினால் வீங்கியிருக்கும் அந்தப் பகுதியை காட்டியபடி தனக்கு உடலில் பல இடங்களில் எறிகணைத்துண்டுகள் இருப்பதாக குறிப்பிட்டார். தற்பொழுது ஒரு காலும் கையும் இயங்குவதில் சிரமங்களை தருவதாகவும் தலை எப்பொழுதும் வலித்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். அவர்தான் மாற்று வலுவுள்ள அந்த குடியிருப்பிற்கான தலைவியாக செயற்படுகிறார்.
வீடமைப்பதற்காக தரப்பட்ட 5000 ரூபாவில் சில கோழிக்குஞ்சுகளை வளர்த்துக் கொண்டிருக்கும் அன்னலட்சுமியின் குழந்தை வேழினி தான் பம்பமடு போராளித் தடுப்பு முகாமில் தாயாருடன் தடுக்கப்பட்டிருந்தாக தெளிவாக குறிப்பிடுகிறார். 607 குடும்பங்கள் வசிக்கும் அந்த கிராமத்தில் இதுவரையில் நான்கு தடவைகளாக மக்கள் மீள குடியிருத்தப்பட்டிருக்கிறார்கள். சில மக்களுக்கு இன்னமும் தகரங்களும் தரப்பாலும் கிடைக்கவில்லை என்று அந்த கிராமத்தின் தலைவர் சு. சுதாகரன் என்னிடம் குறிப்பிட்டார். செல்வாநகர் அ.த.க பாடசாலை என்ற அந்த கிராமத்திற்குரிய பாடசாலையில் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான வகுப்புக்கள் நடக்கின்றன.
அந்த பாடசாலையில் இருந்த தற்காலிக வகுப்பறைகள் இரண்டு அழிந்து விட்டன. அழிந்த வகுப்பறைக்கு மேலால் தரப்பாலை இழுத்துக் கட்டிக் கொண்டு மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். இருக்கும் ஒரே ஒரு நிரந்தர கட்டிடத்தில் 270 மாணவர்களுக்குரிய வகுப்புக்களை நடத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டில் புறப்பட்ட கணவன் ஜேர்மனியில் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உதயகுமரர் தபோநிதி குறிப்பிட்டார்.
43 வயதான இந்த தாயார் இரண்டு கண்களும் பிறப்பிலே பார்வை இழந்தவர். இவரது தங்கையும் ஊனமடைந்தவர். தனது ஒரே பிள்ளையை கல்வி கற்க வைப்பதற்காக மிகுந்த கஷ்டப்படுவதாக அவர் சொன்னார். கால்கள் ஊனமடைந்த மகனின் சைக்கிள் கடையை நம்பி வாழும் பராசக்தியின் குடும்பத்தில் பல துயரங்கள் காணப்படுகின்றன.
ஓமந்தையில் படைகளின் சோதனை நடவடிக்கையின் பொழுது மகன் ஒருவர் காணாமல் போனதாக குறிப்பிடும் பராசக்தி அவனை இராணுவத்தினர் எங்கு கொண்டு போனார்கள்? எனன் செய்தார்கள்? என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டபடி தடுப்புமுகாமில் நேரிட்ட கொடுமை தனது கணவரையும் கொன்று விட்டதாக சொன்னார்.
தனது மகளின் கணவரும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லும் அவர் இயக்கச்சியிலிருந்து சூரியக் கதிர் நடவடிக்கையால் இடம்பெயர்ந்தது முதல் பல இழப்புக்களை சந்தித்ததாக குறிப்பிடுகிறார். கால் ஊனமடைந்த அவரது மகன் பக்கத்தில் சிறியளவிலாக சைக்கிள் கடை ஒன்றை போட்டுக் கொண்டு இருந்தார்.
பொக்கணையில் நடந்த எறிகணை வீச்சில் கணவரை இழந்த முருகன் புனவேஸ்வரி 1980இல் இனக்கலவரம் காரணமாக மலையக்கதி்லிருந்து தனது தாய் தந்தையர் இடம்பெயர்ந்து வந்ததாக குறிப்பிட்டார். 30 வயதை உடைய அந்த இளம் தாயிற்கு எட்டு வயதான குழந்தை ஒன்று இருக்கிறது.
இந்த வயதில் என்ன செய்வது? தனது குழந்தை எப்படி வளர்ப்பது? என்றும் அநாதரவாக்கப்பட்டுள்ளதை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் அந்த பெண் குறிப்பிட்டார். பிறப்பிலேயே கால் இவருக்கு பாதிக்கப்பட்டு விட்டது. போராட்டத்தில் பங்கெடுத்த காலத்தில் தவறுதலாக காயப்பட்ட பொழுது கால் இயங்காமல் இழுத்து விட்டதா குறிப்பிடும் நான்கு பிள்ளைகளின் தந்தையான சிவகுமார் அதற்காக தடுப்பில் வைக்கப்பட்டிருந்தாக குறிப்பிட்டார்.
கிளிநொச்சி நகரத்தின் கூரையில்லாத சிதைந்த கட்டிடம் ஒன்றிற்குள் இருந்து வாகன இருக்கைகளிற்கான உறைகளை தைத்துக் கொண்டிருந்தார் இராசேந்திரன் புவனேஸ்வரன். வீட்டின் நிலமைகளை பார்க்க பொறுக்காமல் நண்பர்கள் கொடுத்த பழைய தையல் இயந்திரத்தை வைத்து மீண்டும் தனது கணவர் வேலையை தொடங்கியிருப்பதாக லலிதாதேவி குறிப்பிட்டார்.
அந்தப் பழைய இயந்திரம் சிலவேளை பழுதுபடும் பொழுது தானே அதை திருத்தி திருத்தி தைத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடும் புவனேஸ்வரன் யுத்தம் காரணமாக தனது வலது காலை இழந்த நிலையில்தான் தைத்துக் கொண்டிருக்கிறார். மிகப்பெரியளவில் தான் உழைத்து அமைத்த பழைய தையல்கடை குறித்து ஞாபகப்படுத்திய பொழுது அந்த கடை உட்பட எல்லாவற்றையும் தான் இழந்திருப்பதாக குறிப்பிட்டார்.
அவரது பொய்க்காலும் சேர்ந்து தைத்துக் கொண்டிருக்க அவரது துயர நிலையை மீறி புன்னகை நம்பிக்கை தரும் விதமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. இப்படி வலிகளுடன் வாழும் அந்த அந்த மக்களின் குடியிருப்பில் சோபா என்ற தொண்டு நிறுவனத்தால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் ஒன்றிலும் கூரையில்லை. ஒரு கூரையில்லாத கிராமத்தை போல வெயிலில் மக்கள் நனைந்து கொண்டிருக்க எங்கள் வீடுகளுக்கு யாராவது கூரை போட்டுத் தருவார்களா? என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள் அந்த மக்கள்.
1995இல் சூரியகதிர் நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட அந்த மக்களிடம் இருந்த எல்லாவற்றையும் வன்னி இறுதி யுத்தம் பறித்து விட்டது. மாடசாமி அம்சவள்ளி என்ற பெற்றோர் இருபது வயதான தங்கள் மகளை காயமடைந்த பொழுது மாத்தளனில் வைத்து இராணுவத்தினரிடம் காப்பாற்றித் தரும்படி கொடுத்தாகவும் பின்னர் அவளுக்கு என்ன நடந்தது? என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டார்கள்.
அவளை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்று தாங்கள் அலையாத இடமில்லை என்றும் அதனால் பைத்தியமான நிலையில் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள். மகள் காயமடைந்த இடத்திலேயே தங்கள் மகன் ஒருவர் இறந்து போனதாகவும் ஏற்கனவே ஒரு மகன் போராடத்தில் வீரமரணம் அடைந்ததாகவும் அவர்கள் சொன்னார்கள்.
எங்கள் மகள் எங்களுக்கு வேணும் என்று கடுமையாக கோரும் அந்தப் பெற்றோர்கள் தங்கள் இன்னமும் காணியை திருத்தவில்லை என்றும் தங்கள் கூடாரத்திற்கு பாம்புகள் நுழைந்து தம்மை கடித்து கொல்லட்டும் என்றபடிதான் வாழுகிறேன் என் மனதை தகர்க்கும் விதமாக சொல்லி அழுதார்கள். மண்மேடுகளுக்குள்ளாலும் சனங்களற்ற காணிகளுக்குள்ளாலும் செல்லும் பொழுது கூடார முற்றத்தின் முன்பாக உடல் முழுவதும் காயமடைந்த இளம் தாய் கிடந்து கத்திக் கொண்டிருந்தார்.
பக்கத்தில் அவரது குழந்தை ஏங்கியபடி நின்றது. முப்பது வயதான அந்தப் பெண் பதுங்குழிக்குள் குடும்பத்துடன் இருந்த பொழுது எறிகணை வந்து விழந்ததில் தங்கம்மா என்ற அந்தப் பெண்ணின் கணவர் சதானந்தனுடன் தங்கம்மாவின் சகோதரர் மற்றும் இரண்டு குழந்தைகளும் பலியாகி விட்டார்கள். தலை கொதிக்கிறது என்றும் வாந்தி வருகிறது என்றும் முற்றத்தில் கிடந்து அவர் கத்திக் கொண்டிருந்தார்.
தங்கம்மாவை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதுடன் அந்த கிராமத்திலிருந்து அன்று விடைபெற்றேன். தங்கம்மாவை பார்த்துக் கொண்டு எனது பிள்ளையை எப்படியாவது திருத்த வேண்டும். இந்த பிள்ளை சுமக்கும் எறிகணைத்துண்டுகளை எப்படியாவது வெளியில் எடுக்க வேண்டும் என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
தங்கம்மாவைப்போல நிறைய மக்கள் உடலாலும் மனதாலும் காயங்களுடன் பாகங்களாகவும் முழுமையாகவும் கழற்றித் திருத்தப்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இப்படித்தான் செல்வாநகர் கிராமம் காயங்களாலும் நீண்டகால மற்றும் யுத்தம் ஏற்படுத்திய வறுமையாலும் மெலிந்து போயிருக்கிறது.
யுத்தத்தினால் அதிகம் சிதைந்து போயிருக்கிறது. இந்தக் கிராமத்தின்மீது அதிகம் அதிகம் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டும். போரால் இழப்புக்களுக்கு முகம் கொடுத்த இந்த மக்கள் மீள் வாழ்க்கைக்கு செல்ல வழிகளை ஏற்படுத்த வேண்டிய பெரும் அவசியம் நமக்கு இருக்கிறது.
நன்றி :- குளோபல் தமிழ் செய்தி
No comments:
Post a Comment